சிட்டி யூனியன் வங்கி நிறுவனர் தினவிழா மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

சென்னை

சென்னை, நவ.25: மிகப் பெரிய நாடான இந்தியாவின் ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்துவம் இருக்கும். இதற்கேற்ப விதிகளை செயல்படுத்தினால் நாம் அதற்கு கட்டுப்பட்டு இருப்போம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யோசனை தெரிவித்துள்ளார்.
சிட்டி யூனியன் வங்கியின் நிறுவன தின விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கியின் செல்லிடப்பேசி செயலியை வெளியிட்டு பேசியது:
ஒரு நிறுவனம் 100 ஆண்டுகள் உயிர்ப்போடு இருந்தால் அது மிகப்பெரிய சாதனை. ஒரு நாட்டின் வளர்ச்சியை அங்குள்ள நிறுவனங்களை முன்னிறுத்தி சொல்கிறோம். வளர்ச்சி ஒரு பகுதி என்றாலும் கூட கலங்கம் இல்லாமல் செயல்படுவது முக்கியம்.

இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. இங்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்துவம் இருக்கும். இதற்கேற்ப விதிகளை செயல்படுத்தினால் நாம் அதற்கு கட்டுப்பட்டு இருப்போம். அதே போல் வங்கிகளும் சிறப்பாக செயல்படும். இவ்வாறு செய்வதாலேயே வங்கிகளில் லாபம் அதிகரித்து அந்தத் தொகையை அவர்கள் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தில் செலவிடுகிறார்கள். இது ஒரு சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. தற்போது வணிகத்தைப் பெருக்குவது மிகப் பெரிய வியாதியாக உருவெடுத்து வருகிறது. வணிகத்தைப் பெருக்குவது, கிளைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் நன்கு ஆராய்ந்த பிறகே ஈடுபட வேண்டும் என்றார். நிகழ்வில், வங்கியின் தலைவர்ஆர்.மோகன், மேலாண்மை இயக்குநர் என்.காமகோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.