உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பாடுபடுக அதிமுக பொதுக்குழுவில் தொண்டர்களுக்கு எடப்பாடி வேண்டுகோள்

சென்னை

சென்னை, நவ.25: உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயாராக வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல, ஆகவே தொண்டர்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்றவே மத்திய பிஜேபி அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதுபோல், மத்திய அரசுக்கு, ஆளும் அதிமுக அரசு அடிமை இல்லை. அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு முதல்வர் நிலைக்கு உயர்ந்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளில் அதிக போராட்டங்களை சந்தித்த ஆட்சி அதிமுக ஆட்சி.

தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதியளித்த மத்திய அரசுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் பிப்ரவரி மாதத்தில் முடிவடையும். நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் பிரித்து பார்த்து மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன் கூட்டணி அமைத்தாலும், அது வலுவான கூட்டணியாக இருந்தது. கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி இருந்ததால் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம். கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர். டிடிவி தினகரன் மற்றும் குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். யார் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை, உயிரோட்டம் உள்ள கட்சி அதிமுக மட்டும்தான். டிடிவி தினகரன் துரோகிகளை அழிப்பதுதான் நோக்கம்.அவர்தான் துரோகி. கடலில் போட்ட உப்பை போல தினகரன் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது .

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதி, அதற்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயாராக வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல, ஆகவே தொண்டர்கள் வெற்றிக்காக பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சி வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து பேசியதாவது: அதிமுகவின் கட்சி வங்கி கணக்கில், 226 கோடியே 90 லட்ச ரூபாய் நிரந்த வைப்புத் தொகையாக இருப்பதாகவும், தேர்தல் நிதியாக 46 கோடியே 70 லட்ச ரூபாய் பெறப்பட்டது நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் 19 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அனைவரிடத்திலும், ஒற்றுமை உணர்வு உறுதி பட இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமருவது என்பது தான், அந்த அதிசயம் என்றும் கூறினார். இதை தொடர்ந்து கட்சி விதிகளில் மாற்றம் செய்ய இக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. அமைப்பு ரீதியாக 56 மாவட்டங்களாக பிரிக்கவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.