தலைமைச் செயலகத்தில் புதிய கட்டுப்பாடு புகைப்படத்துடன் அடையாள அட்டை

சென்னை

சென்னை நவ.25: தலைமைசெயலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புகைப்படத்துடன் நுழைவு சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை 107.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனுள் தமிழக அரசின் தலைமை செயலகம் உள்பட பல்வேறு அரசு துறைகளை உள்டக்கிய நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவை செயல்பட்டு வருகிறது. தலைமை செயலகத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி முதலமைச்சரின் தனிப்பிரிவு, அரசு துறைகள் செயல்பட்டு வருவதால், பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரகணக்கான மக்கள் தலைமை செயலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

இங்கு வருகை தரும் மக்கள் அனைவரின் முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்று கொண்டு காவல்துறையினர் தலைமை செயலகத்திற்கு அனுமதி அளித்து வந்தனர். தலைமை செயலகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி, புதிய நடைமுறை இன்று காலை முதல் காவல்துறையினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: தலைமை செயலகத்திற்கு வருகை தரும் நபர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு முறை அமல்படுத்துவது தொடர்பாக சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தலைமை செயலகத்திற்கு வரும் மக்களின் புகைப்படம் செல்போனில் எடுக்கப்பட்டு, சிறிய வகையான மிஷின் மூலம் அச்சிட்டு புகைப்படத்துடன் கூடிய நுழைவு சீட்டு அந்த நபருக்கு வழங்கப்படுகிறது. இந்த நுழைவு சீட்டை வைத்து கொண்டு குறிப்பிட்ட நாள் தலைமை செயலகத்தின் எந்த பகுதிக்கும் அந்த நபர் சென்று வர முடியும். அதற்கு மறுநாள் அந்த நுழைவு சீட்டை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.