சென்னை, நவ.26:  அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதிமுதல் 5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி நடைபெற உள்ளது. பிப்ரவரி 9ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் விலகியுள்ளார்.

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெறும் சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறாராம்.  இது குறித்து ஸ்ரீகாந்த் தனது டிவிட்டர் பதிவில், கடினமான பாதை எனக்கு காத்து இருக்கிறது. என் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை என தெரிவித்துள்ளார்.