பொங்கல் பரிசு ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

TOP-1 தமிழ்நாடு முக்கிய செய்தி

கள்ளக்குறிச்சி, நவ.26: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார்.

திண்டிவனத்தில் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்படும் என்றும், மேலும் 10 மாவட்டங்களில் உணவு பூங்காக்களை ஏற்படுத்தி விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் பழவகைகளுக்கு உரிய விலை கிடைக்க வழி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள்,எம்பி ,எம்ஏல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் பேசியதாவது:- இது புதிய மாவட்ட தொடக்க விழா என்று மட்டுமல்லாமல் பல்வேறு நலத்திட்டங்களை இங்கு தொடங்கி வைக்கிறோம். ரூ.12,7 கோடி மதிப்பில் 52 பணிகளை திறந்து வைத்திருக்கிறேன். நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 5873 பயனாளிகளுக்கு ரூ.23.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடன் பணியாற்றும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார். அவரது வாக்குறுதியை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

2017, 18 மற்றும் 19 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 62,494 பெண்களுக்கு ரூ.380 கோடி மானியத்தில் இருசக்கர வாகனங்களை வழங்கியிருக்கிறோம். திண்டிவனம் அருகே பிரம்மாண்டமான உணவுபூங்கா அமைக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்களை இங்கு விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம். ஆன்லைன் மூலமும் உணவு பூங்காவில் பொருட்களை விற்கலாம். இந்த உணவு சந்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும். எங்கள் அரசின் பிரதான திட்டமாக குடிமராமத்து பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016-17-ல் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சொட்டு மழை நீரைக் கூட வீணாக்காமல் ஏரி, குளங்களில் சேமித்து வருகிறோம். விவசாயிகளுக்காகவே இதை அர்ப்பணிக்கிறோம்.

ஏரி, குளங்களில் அள்ளப்படும் வண்டல் மணலை எவ்வளவு வேண்டுமானாலும் விவசாயிகளுக்கே வழங்குகிறோம். கடந்த காலங்களில் ஒரு டிராக்டர் மணல் கூட பெற முடியாத நிலை இருந்தது. அதை மாற்றி அதிகாரிகளின் அனுமதி பெற்று எவ்வளவு மணல் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். ஒரே ஆண்டில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளோம். கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டால் தான் ஏழைகளின் வாழ்வு வளம் பெறும். இதை உணர்ந்து ஏழை மக்களுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புடன், ரூ.1,000 வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த விழாவில் பேசிய அவர், சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். பொங்கல் பரிசுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி, திராட்சை ஆகியவைகளும் வழங்கப்படும்.