சென்னை, நவ.26: வடபழனி பணிமனையில் பேருந்து சாவியை எடுப்பது தொடர்பாக டிரைவர்களிடையே மோதல் ஏற்பட்டதில், 7 பேர் கைது செய்யப்பட்டனர். வடபழனி அரசு பேருந்து நிலையத்தை ஒட்டி பணிமனை உள்ளது. இரவுப் பணி முடித்த டிரைவர் பேருந்தை பணிமனையில் நேற்று நிறுத்திவிட்டு சாவியை எடுத்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு ஊழியர், சாவியை வண்டியில் வைத்துவிட்டுச் செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இருவரிடையே எழுந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.  இதுகுறித்து தகவலறிந்துவந்த வடபழனி போலீசார், தகராறில் ஈடுபட்ட 4 டிரைவர்கள் உட்பட 7 பேரை கைது செய்தனர். டிரைவர்களிடையே ஏற்பட்ட இந்த திடீர் மோதலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.