சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் அதிமுக கடலூர் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழ்நாடு

கடலூர், நவ.26: சமூக நீதியை காக்க அதிமுக எப்போதும் குரல் கொடுத்து வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது முழு உருவச் சிலை திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என 26.9.2018 அன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, விழாவும் கொண்டாடப்பட்டது. அவரது புகழைச் சிறப்பிக்கும் வகையில், அவரது படம் சட்டப்பேரவையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது இந்த மணிமண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 1980 -ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக எம்.ஜி.ஆர். உயர்த்தினார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கும் சேர்த்து தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதை நிலைப்பெறச் செய்து, சமூக நீதியைக் காத்தவர் ஜெயலலிதா. இதற்காக, 1993-இல் சட்டமியற்றி, அரசியலமைப்புச் சட்டம் 9- ஆவது அட்டவணையில் சேர்த்து, சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.

சமூக நீதிக்கு ஆபத்து வரும் நேரும் போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுத்து, பாதுகாத்து வருவது அதிமுக அரசுதான். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இந்த அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.