2 புதிய ஏசி பஸ்களை அமைச்சர் துவக்கினார்

சென்னை

சென்னை, நவ.26: சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு குளிர்சாதன வசதி கொண்ட அரசு பேருந்து சேவையினை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன், முன்னிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:- சிதம்பரத்திலிருந்து கடலூர், புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு குளிர்சாதன வசதியுடன் இரண்டு அரசு பேருந்து சேவை தினசரி காலை 6.10 மணி அளவிலும் மதியம் 2.15 மணி அளவிலும், இரவு 10.30 மணி அளவிலும் செல்ல உள்ளது. இந்த பேருந்து 3 – 2 இருக்கை வசதி பயணிகள் கவரும் வண்ணம் முதன் முறையாக குளிர் சாதான வசதி செய்யப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.

6 ஸ்பீக்கர் போடப்பட்டுள்ளது. அனைத்து இருக்கைகளிலும் குளிர்சாதன கருவி திறந்து மூடும் வசதி செய்யப்பட்டுள்ளது. எல்இடி லைட் வசதி செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் அவசர காலங்களில் பயணிகள் வெளியேற அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் வெ.அன்புச்செல்வன் முன்னிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் 40 ஈச்சமரங்கள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் சப் கலெக்டர் விசு மகாஜன், துணை மேலாளர்கள் கே.சேகர்ராஜ், முருகானந்தம், சுந்தரம், கிளை மேலாளர்கள் புவனேந்திரன், அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.