திருச்சி, நவ.26: திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத இந்த இடத்தில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தன. இந்த செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே கஞ்சா செடிகளும் வளர்ந்து இருந்தன. நேற்று இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக விரோதிகள் யாரேனும் திட்டமிட்டு கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்தார்களா? அல்லது மர்ம நபர்கள் அங்கு அமர்ந்து கஞ்சா பயன்படுத்தியபோது, அதில் இருந்து சிதறிய விதைகள் மூலம் செடிகள் வளர்ந்ததா? என்பது தெரியவில்லை. உடனடியாக இது குறித்து தென்னூர் பகுதி மக்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ராயல்சித்திக் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தில்லைநகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொதுமக்கள் முன்னிலையில், அங்கு வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை அகற்றி அழித்தனர்.