முதல்வர் துவக்குகிறார் இரு மாவட்டங்களிலும் திட்டப்பணிகளுக்கு அடிக்கல்

TOP-2 சென்னை முக்கிய செய்தி

சென்னை, நவ.27: தமிழகத்தில் 35 மற்றும் 36-வது மாவட்டங்களாக திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை நாளை உதயமாகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய மாவட்டங்களை துவக்கி வைத்து திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 33-வது மாவட்டமாக தென்காசியும், 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியும் உதயமாகின. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை 35 மற்றும் 36-வது மாவட்டங்களாக நாளை உதயமாகின்றன.

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இதில் திருப்பத்தூர் டான் பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை 28.11.2019 காலை 10.30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து, அந்தபகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு இராணிப்பேட்டை கால் நடை நோய்த்தடுப்பு மருந்து நிலையம் வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேருரையாற்ற உள்ளார்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார்.வருவாய்த்துறை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருப்பத்தூர் கலெக்டர் ம.ப. சிவன் அருள், ராணிப்பேட்டை கலெக்டர் எஸ். திவ்யதர்ஷனி, வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் , வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா , தலைமை செயலாளர் க. சண்முகம் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.