ப.சிதம்பரத்துடன் ராகுல் காந்தி சந்திப்பு பிரியங்கா வதேராவும் உடன் சென்றார்

TOP-5 இந்தியா முக்கிய செய்தி

புதுடெல்லி, நவ.27: சுமார் நூறு நாட்களாக திஹார் சிறையில் இருந்து வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா ஆகியோர் இன்று சிறைக்கு சென்று நலம் விசாரித்தனர். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

இதனால், கடந்த 3 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இன்று காலை திஹார் சிறையில் 7-வது சிறைப்பகுதியில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்து பேசினர். கடந்த மாதம் சோனியா காந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

அவருடைய சிறைவாசம் இன்றுடன் 99 நாட்களை எட்டியுள்ளது. கடந்த மூன்று மாதமாக சிறையில் இருப்பதால் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பத்து கிலோ அளவுக்கு எடையும் குறைந்துள்ளது. அவரது உடல்நிலையைக் கருதி அவருக்கு தனியறை, மருந்துகள், வீட்டிலிருந்து சாப்பாடு ஆகிய வசதிகளை செய்து தருமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.