சென்னையில் நடிகர் பாலாசிங் திடீர் மரணம் நாளை சொந்த ஊரில் உடல் தகனம்

TOP-6 சென்னை

சென்னை, நவ.27: நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அவருக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர தொடங்கின.  மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர நடிகர், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். அந்த வகையில் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலாசிங்கின் மரணம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த பாலாசிங் உடல் விருகம்பாக்கம், காவல்நிலையம் அருகே உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு இன்று மாலை அவரது உடல் எடுத்துச்செல்லப்படுகிறது. நாளை அங்கு சடங்குகள் முடிக்கப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.