சிதம்பரம், நவ.27: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 16 ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் தர்ஷன் தாக்கிய சம்பவம் இணைய தளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக, தீட்சிதர் தர்ஷன் மீது சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், போலீசார் தன்னை கைது செய்யக் கூடுமென அஞ்சி, முன்ஜாமின் கேட்டு தீட்சிதர் தர்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டுமென அந்த பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தான் தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், மனு குறித்து பதில் அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 3- ம் தேதிக்கு தள்ளி வைத்தார். வழக்கு பதிவு செய்வதற்கு முன்னரே முன்ஜாமின் கோரி தீட்சிதர் தர்ஷன் தாக்கல் செய்த மனு ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.