உத்தவ் தாக்கரே கவர்னருடன் சந்திப்பு மகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்பு

அரசியல் இந்தியா

மும்பை, நவ.27: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நாளை மாலை மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடக்கும் விழாவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்கிறார். இன்று கவர்னரை சந்தித் உத்தவ் தாக்கரே 166 ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை தாக்கல் செய்தார். மகாராஷ்டிரா அரசியலில் நடந்த திடீர் திருப்பமாக துணை முதல்-மந்திரி அஜித்பவாரும், அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அடுத்தடுத்து நேற்று மாலை தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பிஜேபி தலைமையிலான ஆட்சி பதவியேற்ற 4 நாட்களில் கவிழ்ந்தது. இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும் 3 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் முன்மொழிந்து இருந்தனர்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அழைப்போம் என்றார். இதனிடையே இன்று காலை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். தன்னை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் பட்டியலையும் அவர் தாக்கல் செய்ததாக தெரிகிறது.