50,000 பயனாளிக்கு 2,00,000 ஆடுகள் அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தகவல்

சென்னை

சென்னை, நவ,27: தமிழகம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை சுமார் 2 லட்சம் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் குறித்து அனைத்து மண்டல இணை இயக்குனர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு பால் வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் அவர்களும் , கால்நடை பராமரிப்பு மருத்துவப் பணிகள் இயக்குனர் திரு ஞானசேகரன் மற்றும் இணை இயக்குனர்கள் அனைத்து மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் கால்நடை பண்ணை துணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இந்த ஆண்டு விலையில்லா கறவை பசுக்கள் செம்மறி ஆடுகள் மற்றும் கோழிகள் வழங்குவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. பயனாளிகளுக்கு உரிய கால கட்டத்தில் இந்த கறவை பசுக்கள் வெள்ளாடுகள் மற்றும் கோழிகள் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இதுவரை 4451 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் கன்றுடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் , இதேபோல் இதுவரை 50 ஆயிரத்து 454 பயனாளிகளுக்கு இரண்டு லட்சத்தி 1816 வெள்ளாடு செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் கோமாரி நோய் தாக்கத்திலிருந்து கால்நடைகளை காத்திட இதுவரை கோமாரி நோய் தடுப்பு ஊசி அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 93 லட்சத்து 59 ஆயிரத்து 790 மாற்றங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11.40 கோடி செலவில் 75 கால்நடை நிலையங்கள் புதிதாக தொடங்க உள்ளதாகவும் 25 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்கள் ஆகவும் 5 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.