உயர்கல்வியில் முதலிடம் விழுப்புரம் சட்டக்கல்லூரி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழ்நாடு

விழுப்புரம், நவ.27: தமிழகத்தில் உயர்கல்விக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்வதில் அரசு தனிக்கவனம் செலுத்துவதால் தான் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.70 கோடியே 59 லட்சம் மதிப்பில் அரசு சட்டக்கல்லூரியும், விழுப்புரம் சாலாமேட்டில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பில் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் புதியதாக கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா மற்றும் விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று மதியம் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், அமைச்சர் துரைக்கண்ணு, சட்டத்துறை அரசு செயலாளர் கோபி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றார். விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 85 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 3 மாவட்ட மாணவர்களுக்கு அரசு சட்டக்கல்லூரி ஏதும் இல்லை என்ற காரணத்தினாலும், சட்டம் பயில விரும்பும் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் பேரிலும் அந்த மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்றும் விழுப்புரம் நகரில் 2017-18-ம் ஆண்டில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்விக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் அதிமுக அரசு மிகுந்த கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நூற்றாண்டு விழா காணும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.