அஜித் பவார் மனதை மாற்றிய பிரதிபா பவார் மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பங்கள்

அரசியல் இந்தியா

மும்பை, நவ.27: அஜித் பவாரின் மனதை மாற்றியதில் சரத்பவாரின் மனைவி பிரதிபா முக்கிய பங்கு வகித்துள்ளார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் கடந்த திங்கள் கிழமை துணை முதலமைச்சராக பதவியேற்ற உடன் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கட்சியைப்போலவே எங்கள் குடும்பத்திலும் பிளவு ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தார். பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதில் கடந்த 4 நாட்களாக சரத்பவாரின் மனைவி அரும்பணியாற்றி இருக்கிறார். பவார் குடும்பத்தில் இவருக்கு தனி மரியாதை உண்டு. இவர் சொல்லுவதை குடும்பத்தினர் யாரும் தட்டமாட்டார்கள். இவர் அஜித்பவாரை சந்தித்து பேசிய பிறகே அவரது மனம் மாறியிருக்கிறது. அதைதொடர்ந்தே நேற்று மதியம் தனது ராஜினாமாக கடிதத்தை வழங்கியிருக்கிறார்.

தேசியவாத எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்க முன்வராதது ஒரு காரணம் என்ற போதிலும் குடும்பம் மற்றும் கட்சி பிளவுபடுவதை தடுப்பத்தில் சரத்பவாரின் பிரதிபா முக்கிய பங்காற்றி இருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதற்கு ஒரு கருவியாக விளங்கிய பிரதிபா பவார் மறைந்த கிரிக்கெட் வீரர் சாது ஹிண்டேவின் மகள் ஆவார். சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க கட்சியில் எதிர்ப்பு கிளம்பிய போதும் பிரதிபா வற்புறுத்தியதின் பேரிலேயே கூட்டணி அமைக்க சரத்பவார் சம்மதித்ததாக தெரியவந்துள்ளது.