ஆந்திராவைச் சேர்ந்த நான்கு பேர் கைது ரூ.3 லட்சம் ரொக்கம், செல்போன்கள் பறிமுதல்

குற்றம் தமிழ்நாடு

திருச்சி, நவ. 28: மணப்பாறை மற்றும் திருச்சி பகுதிகளில் வங்கிகளிலிருந்து பணம் எடுத்து வரும் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆந்திராகொள்ளை கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் செல்போன்கள், பைக்குகள்சூ ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மணப்பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன் பல் மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ரூ.49 ஆயிரம் கொள்ளை போனது.

இதேபோல் துவரங்குறிச்சியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து மொபட்டில் சென்று கொண்டிருந்தவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று அதிகாலை மணப்பாறை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும் வகையில் 2 மொபட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், ஆந்திராவை சேர்ந்த பாபு (வயது 45), மோகன் (வயது 27), ரமணா (வயது 31), சரவணா (வயது 30) என்பதும், மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சியில் நடைபெற்ற கொள்ளையில் 4 பேருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 4 செல்போன்கள், 2 மொபட்டுகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வயதானவர்கள் வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும்போது அவர்களை நோட்டமிடும் மர்ம நபர்கள் தான் இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். ஆகவே கொள்ளை சம்பவங்களை தடுத்திட வங்கிக்கு செல்லும் முதியோர்கள் தங்களுடன் நம்பிக்கைக்குரிய ஒருவரை உதவிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் அறிவுறுத்தியுள்ளார்.