உத்தவ் பதவியேற்பு விழா: ஸ்டாலின்- மம்தா பங்கேற்பு சோனியா, ராகுல் வரவில்லை என தகவல்

அரசியல் இந்தியா

மும்பை, நவ.28: மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று மாலை 6.45 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்கிறார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல¢காந்தி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. அவசரகதியில் பதவியேற்ற முதலமைச்சர் பட்னாவிசும், துணை முதலமைச்சர் அஜித்பவாரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி அமைகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரேவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இன்று மாலை 6.45 மணியளவில் மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் பிரமாண்டமான முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சுமார் 50,000 பேர¢ இதில் பங்கேற்பார்கள் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்குமாறு சோனியா, ராகுல் ஆகியோரை டெல்லியில் சந்தித்து உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே அழைப்பு விடுத்தார். ஆனால் சிவசேனையிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் விழாவுக்கு வரவில்லை என தெரிகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் விழாவில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. துணை முதலமைச்சர் பதவிக்கு தேசியவாத காங்கிரசில் இருந்து மீண்டும் அஜித் பவாரின் பெயர் பரிந்துரைக் கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 3 கட்சிகளையும் சேர்ந்த 6 பேர் இன்று பதவியேற்பார்கள் என தெரிகிறது. துணை முதலமைச்சர் பதவி கேட்ட காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்பட உள்ளது.