திருப்பத்தூர், நவ.28: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவில் தமிழக நீராதார உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் திருப்பத்தூர் புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். திருப்பத்தூர் புதிய மாவட்ட தொடக்க விழா இன்று காலை திருப்பத்தூரில் உள்ள தனியார் மேனிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேருரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய மாவட்டம் ஜவ்வாது மலை, ஏலகிரி மலைகளால் சூழப்பட்டது. சந்தனக்கிடங்கு அமைந்திருப்பதால் இதனை சந்தன நகரம் என்றும் அழைக்கிறார். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட புதிய மாவட்டம் ஆன்மீக தலங்களையும் கொண்டதாக விளங்குகிறது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட இருப்பதால், வேளாண்மை மற்றும் தோல் தொழிற்சாலைகள் இங்கு மேலும் சிறப்படையும் என்று உறுதியிட்டு கூறுகிறேன். 9.9.2017 அன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது நான் அறிவித்த பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயியான நான் முதலமைச்சராக உள்ள நிலையில் விவசாயிகள் நலன் காக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். குறிப்பாக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் ரூ.634 கோடியே 74 லட்சம் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டும் அணையை தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் திறமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும். மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் தமிழகத்தின் நீராதார உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அமைய வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம். அந்த அடிப்படையில் தான் தற்போது நாடாளுமன்றத்தில் அச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து கிராம மக்களிடமே நேரடியாக மனுக்களை பெற்று வருகிறேன். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் வாயிலாக 9 லட்சத்து 72,216 மனுக்கள் பெற்றிருப்பது வரலாற்று சாதனை. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம். எந்த மனுவும் நிராகரிக்கப்படக் கூடாது என்றும், உரிய தகவல்களை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவையும் வழங்கியிருக்கிறேன். முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான சொத்து வரம்பை ரூ.50 ஆயிரத்தில் இருந்து, ரூ.1 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளேன். இப்படி ஏழை எளிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இந்த அரசு அமைந்துள்ளது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரிசி அட்டை வைத்துள்ள 2.05 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில்1000 ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒருகிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து அத்திட்டத்தை நாளை துவக்கி வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருணாம்பட்டு அருகே தடுப்பணை கட்டுவது, ஆம்பூர் வட்டம் வெங்கிலி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டுவது, வண்ணாந்துறை கிராமத்தில் காணாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஏலகிரியில் தாவரவியல் பூங்கா, புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.