6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை, திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னை

சென்னை, நவ.28: சென்னையில் புறநகர் பகுதிகளிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக காஞ்சிபுரம், வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடிய விடிய மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார். வேலூர், காஞ்சிபுரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சென்னை பல்கலை. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரில் ஒருசில இடங்களிலும் புறநகர் பகுதியான தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், ஆவடி, அம்பத்தூரிலும் இரவு முதல் விடியும் வரை கனமழை பெய்தது.வண்டலூரில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தாம்பரம் மற்றும் சேலையூரில் சாலைகள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றதால் போக்குவரத்து தடைபட்டது. சேலையூர் ஏரியும் நிரம்பி வருகிறது. இன்று காலை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.