ரூ.1 கோடி மதிப்புள்ள 3கிலோ தங்கம் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்தது

குற்றம் சென்னை

சென்னை, நவ.28: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ஒருகோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஹாங்காங், பாங்காங், கொழும்பு, துபாய் ஆகிய இடங்களிலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் விமானங்கள் வந்தன. அதிலிருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைகள் முடிந்து பயணிகள் அனைவரும் சுங்கத்துறை சோதனை வழியாக வெளியேறினர்.

அப்போது சுங்கத்சோதனை பகுதியில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக வந்த தகவலின்படி அதிகாரிகள் சென்று பார்த்த போது அதில் 3 கிலோ எடையுள்ள தங்கம் வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து பயணிகள் கடத்தி வந்த தங்கத்தை சுங்கசோதனைக்கு பயந்து விட்டு சென்றனரா என்ற விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சோதனை செய்தபோது சீன பயணி ஒருவர் பையை விட்டு சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல்கொடுக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.