நித்யானந்தாவை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவி 2 பெண்கள் கடத்தல் விவகாரம்

குற்றம் சென்னை

சென்னை, நவ.28: நித்யானந்தா மீது புகார்கள் குவிந்து வருவதையடுத்து அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை நாட குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது. நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்று இருக்கலாம் என்று தகவல் பரவியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜராத்தை சேர்ந்த லோபமுத்திர சர்மா, நந்திதா சர்மா ஆகிய இரண்டு பெண்களையும் நித்யானந்தா கடத்தி அடைத்து வைத்திருப்பதாக அவரது தந்தை ஜனார்த்தன சர்மா குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆஸ்சிரமத்தில் அந்த பெண்களை காணவில்லை. மேலும் நித்யானந்தாவும் அங்கு இல்லை. வெளிநாடு தப்பிச்சென்று இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பெண்களை மீட்பதற்கு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கலாம் என்று குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேவைப்பட்டால் சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) உதவியை நாடலாம் என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் கூறியது. இதனை தொடர்ந்து குஜராத் மாநில உள்துறை சர்வதேச காவல்துறை உதவியை நாடியிருக்கிறது. இதனிடையே நித்யானந்தா மீது மேலும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து அவரை பிடிக்க வேண்டிய நெருக்கடி காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.