ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில், தர்பார் படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ரஜினியின் ‘168-வது’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இன்னொரு புறம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக கீர்த்திசுரேஷ் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மூன்று நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் ரஜினியுடன் அண்ணாமலை படத்தில் கலக்கிய குஷ்பு, வீரா, எஜமான் ஆகிய படங்களில் கலக்கிய மீனா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் படத்தின் இயக்குனர் சிவா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதேபோல் பேட்ட படத்தில் நடித்த சிம்ரனுடனும் பேசப்பட்டு வருகிறது. இந்த மூன்றுபேரில் இருவர் நடிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் குஷ்பு இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.