சென்னை, நவ.29: ஷெனாய் நகரை சேர்ந்தவர் ரங்கநாயகி (வயது 70). இவரது மகன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவரை காண்பதற்காக ரங்கநாயகி நேற்று அமைந்தகரை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த 3 பெண்கள், ரங்கநாயகியிடம் ஆட்டோவில் ஏறும்படி கூறி உள்ளனர். இவரும், ஷேர் ஆட்டோ என நம்பி ஏறியுள்ளார். அப்போது, அந்த பெண்கள் ரங்கநாயகியின் தங்க சங்கிலி கழன்றிவிழுமாறு இருப்பதாக கூறியதால் ரங்கநாயகி சங்கிலியை கழற்றி தனது கைப்பையில் வைத்துள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் கைப்பையில் பார்த்தபோது, அதில் வைத்திருந்த தங்க சங்கிலி மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில், கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவை கொண்டு 3 பெண்களை தேடிவருகின்றனர்.