தொழிலாளி பாட்டிலால் குத்தி படுகொலை ஒருவர் கைது: இரண்டு பேரிடம் போலீஸ் விசாரணை

குற்றம் சென்னை

சென்னை, நவ.29: நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 40). இவர் கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் சாலை பிளாட்பாரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கீரித்தலையன் என்கிற சிவக்குமார் (வயது 30), முருகன் (வயது 30) மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 38) ஆகியோர் நேற்றிரவு 10.30 மணி அளவில் ராபர்ட்டும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கே.«.கநகர், ஆர்கே சண்முகம் சாலை மற்றும் அண்ணா மெயின் ரோடு சந்திப்பில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

திடீரென்று ராபர்ட்டுக்கும் அவரது நண்பர் கீரித்தலையன் என்கிற சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ராபர்ட் சிவக்குமாரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. படுகாயமடைந்த ராபர்ட் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இது குறித்து தகவலறிந்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த ராபர்ட் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கே.கே.நகர் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி தப்பி ஓடிய சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த அவர்களது நண்பர்களான முருகன் மற்றும் ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.