‘மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு மன்றம்’ தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

தமிழ்நாடு

திருச்சி, நவ.29: 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மன்றம் ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். திருச்சி நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான, மண்டல அளவில் ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி முகாமை தொடங்கி பேசிய தாவது:- இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கோவை, வேலூரில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு விட்டது. நாளை (அதாவது இன்று) மதுரையில் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்காளர்களை வாக்களிக்க செய்வதுதான் இந்த பயிற்சியின் நோக்கம். எனவே, பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வ ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 5,796 உயர்நிலைப்பள்ளி, 7,809 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 13,605 பள்ளிகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மன்றம் ஏற்படுத்தப்படும். குறிப்பாக 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாள்வது எப்படி? என்றும், 100 சதவீதம் வாக்களிக்க என்ன செய்ய வேண்டும்? என்றும் வழிகாட்டி புத்தகம் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்படும். அதற்காக மாநில, மாவட்டம், சட்டமன்ற தொகுதி வாரியாக மற்றும் பள்ளிகள் அளவிலும் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு கல்வி ஆண்டு முடியும்போதும் மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் வீடியோ கேம் மூலமும், ஓவியம், கட்டுரை மற்றும் பாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி விழிப்புணர்வு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.