137 நபர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை

சென்னை, நவ.29: அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வனப்பழகுனர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 137 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக 10 பேருக்கு இதற்கான ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் வனப்பழகுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 137 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நாட்டின் வளம் காடுகளின் வளத்திற்கு ஏற்ப அமையும். காடுகளின் பராமரிப்பும், பெருக்கமும் மனித இனத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிர்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதை கருத்தில் கொண்டு, மாநிலத்தின் வன உயிரின பாதுகாப்பிற்கும், வன வளர்ச்சிப் பணிகளுக்கும், வனத்துறை கள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டிற்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வனச்செல்வங்களை, ஆக்கிரமிப்பு, திருட்டு மரவெட்டுக்கள், தீ, அனுமதியற்ற மேய்ச்சல், வன உயிரினங்களை வேட்டையாடுதல் போன்றவற்றிலிருந்து காத்திடவும், மனித விலங்கு மோதல்களை தவிர்த்திடவும், வனப்பாதுகாப்பின் உள்கட்டமைப்பினை பலப்படுத்திடவும், வனத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக 2018-ஆம் ஆண்டில் 300 வனவர்கள், 726 வனக்காப்பாளர்கள் மற்றும் 61 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மேலும், 564 வனக்காவலர் மற்றும் 227 வனக்காப்பாளர் பணியிடங்களை விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக வனப்பழகுநர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 137 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், அவர்களுக்கு 20 மாத பயிற்சிக் காலத்திற்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த தொகுப்பு ஊதியத்திற்கு பதிலாக முறையான ஊதியம் வழங்கவும் மற்றும் பிற செலவினங்களுக்காகவும் 17.72 கோடி ரூபாய் அனுமதித்தும் ஆணையிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.