5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் சென்னையில் இன்று பலத்த மழை இருக்கும் என எச்சரிக்கை

TOP-4 சென்னை முக்கிய செய்தி

சென்னை, நவ.30: தஞ்சை, திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் இன்று பலத்த மழை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய சென்னை நகரில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளமாக கரை புரண்டு ஓடியது.
இதனிடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யும். இந்த மழை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் ஏற்படுகிறது. தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நார்வே எச்சரிக்கை இன்று சென்னையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மழை பெய்யும். அதன் பிறகு மழையின் அளவு குறைந்து காணப்படும். பின்னர் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மழை வெளுக்கும். இதைத் தொடர்ந்து மழையின் அளவு குறையும். ஆக இன்று நாள் முழுவதும் சென்னையில் மழை என நார்வே வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

வெதர்மேன்: இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் சென்னை நகரில் ஜோராக மழை பெய்யும் என்று வெதர்மேன் கூறியிருக்கிறார். நம்முடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கனமழை இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். பருவமழையைப் பொறுத்தவரை இந்த மூன்று நாட்களும் மிகச் சிறந்த நாட்கள் என்றும் மழை அளவில் சதம் அடிக்கும் என்றும் (10 செ.மீ.) என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தலைஞாயிறில் 15 செ.மீ மழை: தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு 15 செ.மீ. மயிலாடுதுறை, கன்னியாகுமரி அப்பர் கோதையாறு பகுதியில் 14 செ.மீ., புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் கொடவாசலில் 13 செ.மீ., காட்டுமன்னார் கோயில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், தரங்கம்பாடி, ராமநாதபுரம் 11 செ.மீ., வேதாரண்யம், வலங்கைமான், வல்லம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது. ‘கேடிசி’ எனப்படும் காஞ்சி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் மாமல்லபுரம், பெருங்குடி, மதுராந்தகம், அடையார், மதுராந்தகம், செய்யூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மணலி, மாதவரம், கோடம்பாக்கம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழையைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் அரசு:
தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடையாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுடன் அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மழை காரணமாக அத்தியவாசிய பொருட்கள் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யவும், அனைத்து துறைகளையும் மழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.