எய்ட்ஸ் இல்லாநிலை உருவாக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை

சென்னை, நவ.30: தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம் என உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து சமூக பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல் ஆகும்.

தமிழ்நாடு அரசு, எச்.ஐ.வி எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக 10 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் செயல்பட்டு வரும் அரசின் அறக்கட்டளைக்கு இந்த நிதியாண்டில் (2019 – 2020) 5 கோடி ரூபாயினை கூடுதல் வைப்பு நிதியாக வழங்கியுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 1000 குழந்தைகளுக்கு அந்நிதியிலிருந்து வரும் வட்டியின் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. மேலும், எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய 2,883 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்று, எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயை தடுக்க தன்னார்வ இரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என்றும், எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.