சூரத், நவ.30: நாளை நடைபெற உள்ள சையது முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழகம்-கர்நாடகா அணிகள் மோத உள்ளன. சையது முஷ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. நேற்று அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 2-வது அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு – ராஜஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 9 விக்கெட்டுக்கு 112 ரன்களுக்கு சுருண்டது.

இந்த எளிய இலக்கை விரட்டியபடி களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி 17.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் விட்டுகொடுத்து 116 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் (54) கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து, நாளை மாலை 7 மணிக்கு சூரத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், தமிழக அணி-கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.இதே அணிகள்தான் விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிப் போட்டியிலும் மோதின என்பது கூடுதல் தகவல்.