நூர் சுல்தான், நவ.30: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசியா ஓசியானா பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி கஜகஸ்தானில் உள்ள நூர் சுல்தான் நகரில் நேற்று நடைபெற்றது. 5 ஆட்டங்களை கொண்ட இந்தத் தொடரில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இரு ஆட்டங்கள் நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் உலக தரவரிசையில் 176-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தர வரிசையில் இடம் பெறாத பாகிஸ்தானின் ஷோயிப் முகமதுவை எதிர்த்து விளையாடினார். 42 நிமி டங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்குமார் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், பாகிஸ்தானின் ஹுசைஃபா அப்துல் ரஹ்மானை எதிர்க்கொண்டார்.

சுமார் ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 6-0, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தொடரின் 2-வது நாளான இன்று நடக்கும் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில், இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் இணை, முகமது ஷோயிப்-ஹுசைஃபா அப்துல் ரஹ்மான் ஜோடியை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, மாற்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெறும். இதில் ராம்குமார் ராமநாதன்-ஹுசைஃபா அப்துல் ரஹ்மானையும், சுமித் நாகல்-ஷோயிப் முகமதுவையும் சந்திக்கின்றனர்.