கழிவு நீர் இணைப்பு பெற சலுகைகள் 2 புதிய திட்டம் அமலாகிறது: முதல்வர் அறிவிப்பு

சென்னை

சென்னை, நவ,30: இல்லங்கள் தோறும் குடிநீர் வாரியம் தாமாகவே முன்வந்து கழிவுநீர் இணைப்பு கொடுக்கவும், 2 தளங்கள் உள்ள கட்டிடங்களுக்கு தொலைபேசி யில் பதிவு செய்த உடனேயே ஆவணம் இன்றி இணைப்பு வழங்கவும் சலுகை திட்டங்களை முதலமைச்சர் அறிவித் தார். இவை டிசம்பர் 2-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் கோயம்பேட்டில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.486 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இதில், நீர்மறுபயன்பாடு கொள்கை புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவிலேயே மிகப்பெரிய மூன்றாம் நிலை கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையத்தை அக்டோபர் 1-இல் கொடுங்கையூரில் தொடக்கி வைத்தேன். இதன் மூலம் வடசென்னை, மணலியிலுள்ள தொழிற்சாலைகளுக்குச் சுத்திகரிக்கப்பட்ட நீர்வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோயம்பேட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடக்கி வைத் துள்ளேன். இதன் மூலம் வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக தற்பொழுது தினசரி வழங்கப்பட்டு வரும் 40 மில்லியன் லிட்டர் நன்னீருக்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்பட உள்ளது.

2 புதிய திட்டங்கள் நடை முறைப்படுத் தப்பட உள்ளன. சென்னை பெருநகரில் உள்ள தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் வரையுள்ள கட்டடங்களுக்கு, பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்துக்கு 45674567 என்கிற தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்தவுடன் எந்தவித ஆவணங்களும் இன்றி எளிய நடைமுறையில் கழிவு நீர் இணைப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை கட்டமைப்புகளுடன் கழிவுநீர் இல்லாத வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியமே தாமாக கழிவு நீர் இணைப்பு வழங்கும்.

இந்த இரண்டு திட்டங்களிலும் கழிவுநீர் இணைப்பு கொடுத்த பின்பு, சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கழிவுநீர் கட்டணத் தொகையை ஒரே தவணையில் முழு மையாகவோ அல்லது 5 ஆண்டுக்குள் 10 தவணைகளாகவோ வரி மற்றும் குடிநீர் கட்டணத்துடன், செலுத்த ஏதுவாக இத்திட்டங்கள் டிசம்பர் 2 முதல் நடைமுறைக்கு வரும் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி,அமைச்சார் டி.ஜெயக்குமார் உள்பட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.