7 தமிழக மீனவர்கள் கரைக்கு வந்தனர் கடலோர காவல்படை முயற்சியால் உயிர் தப்பினர்

தமிழ்நாடு

மதுரை, நவ.30: ஏமனில் இருந்து படகில் தப்பி வந்த 7 தமிழக மீனவர்கள் உள்பட 9 பேர் நேற்று கொச்சி வந்து சேர்ந்தனர். அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களும் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேரும் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து ஏமன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பணியாற்றிய இடத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டதால் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான படகை எடுத்துக்கொண்டு இந்தியா நோக்கி புறப்பட்டனர்.

கடந்த 10 நாட்களாக கடலில் தத்தளித்த அந்த படகை அந்தமான் அருகே இந்திய கடலோர காவல் படை கண்டுபிடித்தது. நேற்று பகல் 12 மணிக்கு அந்த படகை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். உடனடியாக திருவனந்தபுரம் அழைத்து செல்லப்பட்ட 9 மீனவர்களி டம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் உரிய பாஸ்போர்ட் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமனில் ஆஷ்சிகார் அருகே உள்ள துறைமுகத்தில் இருந்து படகில் புறப் பட்டபோது 7000 லிட்டர் எரிபொருள் இருந்துள்ளது.

கடைசியாக நடுக்கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் படகின் வேகத்தை குறைத்தும், எரிபொருள் சிக்கனத்தை கையாண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்,
இவர்கள் கூறுகையில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஏமன் சென்றோம். ஆனால் அங்கு பணம் ஈட்டுவது சிம்மசொப்பனமாக இருந்தது மட்டுமின்றி கொத்தடிமைகளாகவும் நடத்தப்பட்டோம் என்றனர்.