ஏழைகளுக்கு இலவச கொசுவலை விரைவில் வழங்கப்படும்: செங்கல்பட்டு விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

சென்னை, நவ.30: உள்ளாட்சி தேர்தலை தடுக்க நினைக்கும் முயற்சி பலிக்காது என்றும், ஏழைகளுக்கு விரைவில் இலவச நைலான் கொசுவலை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு நேற்று உதயமானது. இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட எல்லையிலிருந்து விழா நடைபெறும் இடம் வரை, ஏறக்குறைய 7 கிலோ மீட்டர் தூரமும் மக்கள் வெள்ளமாகக் குழுமி வரவேற்றக் காட்சியைக் கண்டபோது, மக்கள் ஆரவாரத்தோடு, எழுச்சியோடு இருப்பதைப் பார்க்கின்றபொழுது, இந்த மாவட்டத்தைப் பிரிப்பதற்கு எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

செங்கல்பட்டுப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து தமிழ்நாட்டின் 37வது மாவட்டமாக உதயமாகும் செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் நான், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றபோது, 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 41 நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, அதன் மூலம் 35,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதில் 2 திட்டங்களை நான் ஏற்கனவே துவக்கி வைத்துள்ளேன்.

தமிழகத்தில் மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஆங்காங்கே தேங்கி வருவதால் கொசு அதிகமாக உற்பத்தியாகி, மக்களுக்கு மர்மக் காய்ச்சல்கள் வருகிறது. அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அம்மாவினுடைய அரசு ஏழை மக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும். நைலான் துணியிலான அற்புதமான கொசுவலையை எங்களுடைய அரசு ஏழை மக்களுக்கு வழங்குமென்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன். அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று என்று சிலர் கூறினார்கள். அதையும் அரசு விரைவில் பரிசீலிக்கும். தற்போது ஏழை மக்களுக்கு அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எல்லா குடும்பங்களும் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்பதற்காக அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் சுமார் 2 கோடியே 5 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்புப் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழங்கி, இன்றைக்கு காலை அதை துவக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். தமிழகத்திலே ஏழை, எளிய மக்களின் துன்பங்களைக் களைவது தான் எங்களுடைய லட்சியம், அந்த லட்சியப் பாதையிலே இன்றைக்கு வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில், தமிழகம் குடிசையில்லாத தமிழகமாக உருவாக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த தேர்தலை சந்திக்க திறனற்ற முயற்சி செய்கிறது. இந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.