புதுடெல்லி, நவ.30: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அமல்படுத்துவதாக இருந்த ‘பாஸ்டேக்‘ முறை டிசம்பர் 15 வரை தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், எரிப்பொருள் விரையமும் ஏற்படுகிறது. இதை தடுக்க மின்னனுமுறையில் தானியங்கி மூலம் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் வகுத்தது.

இதற்கான ஸ்டிக்கர்களை வாகனங்களின் முன்புற கண்ணாடியில் ஒட்டினால் சுங்கச்சாவடிகளில் உள்ள கேமராக்களில் பதிவாகி தானாகவே கட்டணம் செலுத்துப்பட்டுவிடும். இதற்கென தனிப்பாதை மற்றும் நவீன சாதனங்கள் சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கான ஏற்பாடுகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து டிசம்பர் 15 வரை தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுதழுவிய அளவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 522 சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளும் உள்ளன. இவற்றை தினமும் சராசரியாக 1 கோடியே 44 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. சென்னையில் இசிஆர், ஓஎம்ஆர்-ல் உள்ள சுங்கச்சாவடிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக இருந்தது.