திருவள்ளூர், நவ.30: ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரி விவசாயிகள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த மாம்பாக்கம் பணப்பாக்கம் வேலகாபுரம் அந்தேரி ஊத்துக்கோட்டை போந்தவாக்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை சங்கத்தின் தலைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளருமான நீல வானத்தில் நிலவன் தலைமையில் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் அப்போது அவர்கள் கூறியதாவது மாம்பழத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பணை கட்ட வேண்டுமென நாங்கள் 15 ஆண்டு காலமாக போராடி வருகிறோம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்கள் பகுதியில் தடுப்பணை கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டார் ஆனால் இதுநாள் வரையிலும் மாம்பாக்கம் பகுதியில் தடுப்பணை கட்ட அரசு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை நாங்கள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்காணிப்பு பொறியாளர் சென்னை தலைமை பொறியாளர் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பி தமிழக முதலமைச்சர் என அனைவரிடமும் தொடர்ந்து மனுக்களை அளித்து போராடி வருகிறோம்.

ஆனால் இதுநாள் வரையிலும் எங்கள் பகுதியில் தடுப்பணை கட்ட அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆரணி ஆற்றில் பல அடி ஆழத்துக்கு மேல் மணல் எடுக்கப்படுகிறது உடனடியாக தடுப்பணையை கட்டிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு அரசு அதிகாரிகள் தடுப்பணை கட்டி கொடுத்தால் நல்ல முறையில் விவசாயம் செய்து பயன்பெற முடியும் இவ்வாறு அவர்கூறினார். பின்னர் விவசாயிகள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்