ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வி இசட் துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். புதுமுகம்
சாக்ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டிசம்பர் 6-ல் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், ஒலியமைப்பு ஒருங்கிணைபாளர் விஜய்ரத்தினம், இசையமைப்பாளர் கிரிஷ், நடிகைகள் சாக்ஷி சௌத்ரி, விமலா ராமன், விடிவி கணேஷ் நாயகி, இயக்குனர் வி இசட் துரை ஆகியோர் பங்கேற்று பேசினர்.விழாவில் சுந்தர் சி பேசுகையில், விடிவி கணேஷ் தான் இந்தப்படம் உருவாக காரணம். ஒரு ஹாரர் படம் நடிங்க என்று சொன்னார். யார் இயக்குனர் என்று கேட்ட போது துரையை அவர்தான் பரிந்துரைத்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை.

இயக்குனர் துரை முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும் எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார் ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன் என்றார்.