அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு தொகுதிகளில் தங்கி நிவாரணப்பணி மேற்கொள்ளவேண்டும்

TOP-2 சென்னை முக்கிய செய்தி

சென்னை, டிச.2: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் விரைந்து சென்று அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இனியும் மேற்கொள்ள வேடிண்ய பணிகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை இந்த ஆலோசனை கூட்டத்தில் வழங்கியதாக தெரிகிறது. அணை நீர்வரத்தினை கண்காணித்தல், கரையோர மக்களுக்கான முன்னெச்சரிக்கை போன்றவை, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், மழை காரணமாக அத்தியவாசிய பொருட்கள் கிடைப்பதில் பொதுமக்கள் சிரமம் ஏற்படுவதை தடுத்தல், மழையால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுக்கும் பொருட்டு நடமாடு மருத்து முகாம் நடத்துதல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் என மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்த நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் முதல்வர் இந்த கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. கோவை விரைகிறார் முதல்வர்: கோவை மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் தரைமட்டமானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை செல்வார் என்று தெரிகிறது.