வீடுகள் இடிந்து 18 பேர் உயிரிழப்பு முதல்வர் அதிர்ச்சி: பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி

TOP-3 தமிழ்நாடு முக்கிய செய்தி

கோவை, டிச.2: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் அருகே இன்று அதிகாலை நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மழைக்கு பலர் பலியான சம்பவம் குறித்து அறிந்ததும் முதல்வர் அதிர்ச்சி அடைந்ததுடன், அவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது மேட்டுப்பாளையத்தில் மிக அதிகபட்சமாக 18 செ.மீ. மழை கொட்டியது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு கீழே இருந்த வீடுகள் மீது விழுந்தன. இதில் 4 வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தன. இதில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர், தாசில்தார், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்துள்ளனர். முதல்வர் நிதியுதவி: இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக இன்று (2.12.2019) அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மூன்று வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில், குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் ஆகிய பதினைந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பலத்த மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மேற்படி 15 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.