மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தருக மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

TOP-4 சென்னை முக்கிய செய்தி

சென்னை, டிச.2: தமிழகத்தில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 5224 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கியும், தமிழ்நாடு இணையவழி கண் – இயல் வலைதளம் மற்றும் 32 மாவட்டங்களில் தொலைதூர கண் பரிசோதனை மையங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:- சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.

ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பல்வேறு திட்டங்களை சுகாதாரத் துறையில் செயல்படுத்தி வருவதுதான் இதற்கு காரணம். தமிழக அரசு, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, மக்களின் நல வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கு 75 ஆயிரத்து 268 கோடியே 72 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்.

இதன்படி, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம், கோயம்புத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய ஆறு இடங்களில், 700 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுடன், அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 650 மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆக, கடந்த 8 ஆண்டுகளில் கூடுதலாக 1,350 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டு, 1350 பேர் கூடுதலாக மருத்துவம் படிக்கக்கூடிய வசதியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

மேலும், 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டிருக்கின்றோம். அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் நாங்கள் அனுமதி கேட்டிருக்கின்றோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.