சென்னை, டிச.2: குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைமை துணை இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

தென்மேற்கு அரபிக்கடலில் இலங்கையை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மன்னார் வளைகுடா, மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மணி 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். அக்டோபர் 1 முதல் இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 11 செ.மீட்டர் அதிகம் ஆகும். டிசம்பர் 3, 4 தேதிகளில் நெல்லை, குமரி, புதுக்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை வரை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் பெய்த மழை இரவில் சற்று ஓய்ந்தது. இன்று காலை 10 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.