போலீஸ் பெண் எஸ்.பி. இன்று ஆஜரானார் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்தது

சென்னை

சென்னை, டிச.2: குட்கா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக, போலீஸ் பெண் எஸ்.பி. விமலா, சென்னை ஆயிரம்விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். செங்குன்றம் குட்கா குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் உட்பட மேலும் சில போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின், அமைச்சர் ஒருவரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

இதை கைப்பற்றிய வருமான வரி துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினர். இது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த சிபிஐ குட்கா குடோனுக்கு சீல் வைத்ததுடன், குடோன் அதிபர் மாதவராவ், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட 6 பேரை கைது செய்தது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தெரியவந்ததையடுத்து, அமலாக்கத் துறையினரும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர். இதில், குட்கா விற்பனை மூலம் ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக தெரியவந்ததையடுத்து, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

இதனிடையே, குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உட்பட 12 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அப்போதைய காலகட்டத்தில் மாதவரம் துணை கமிஷனராக பணியாற்றியவரும், தற்போது பொருளாதார குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக பணியாற்றிவரும் விமலா, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆஜரானார். சுமார் ஒரு மணிநேரம் நடந்த விசாரணை முடிந்து மதியம் 12 மணியளவில் திரும்பிச் சென்றார். டிச. 2-ம் தேதி (இன்று) முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனும், 3-ம் தேதி (நாளை) கூடுதல் கமிஷனர் தினகரனும் இது வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளவர்கள் மதியம் வரை ஆஜராகாத நிலையில், மாலைக்குள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.