நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் பாண்டே மும்பையில் இன்று மாலை நடைபெறுகிறது

இந்தியா

மும்பை, டிச.2: இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்பட நடிகை அர்ஷிதா ஷெட்டிக்கும் மும்பையில் இன்று திருமணம் நடக்கிறது. மணிஷ் பாண்டேவுக்கும்- அர்ஷிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், திருமண தேதி குறித்த விவரங்கள் வெளியில் அதிகமாக கசியவிடாமல் ரகசியம் காக்கப்பட்டது. இந்த நிலையில், மணிஷ்-அர்ஷிதா திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடக்கிறது. இந்த நட்சத்திர திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு மட்டுமே பங்கேற்கின்றனர்.

மணிஷ் பாண்டே கர்நாடக அணிக்காகவும், இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். சயித் முஷ்டாக் அலி டி20 தொடரில் சூரத் நகரில் நேற்று இறுதி ஆட்டம் நடந்தது. இதில் தமிழகத்தை ஒரு ரன்னில் வீழ்த்திசாம்பியன் பட்டத்தை கர்நாடக அணி தக்கவைத்தது.
கர்நாடக அணியின் கேப்டனான மணிஷ் பாண்டை அரைசதம் அடித்து 40 பந்துகளில் 60 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மிகவும் பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் கர்நாடக அணி கோப்பையை வென்று, அதன் கேப்டன் மணிஷ் பாண்டேவிற்கு திருமண பரிசாக வழங்கியது.

ஏற்கனவே கடந்த மாதம் விஜய் ஹசாரே கோப்பையிலும் கர்நாடக அணியிடம் இறுதிப்போட்டியில் தமிழகம் தோல்வி அடைந்தது, குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டிக்குப்பின் மணிஷ் பாண்டே நிரூபர்களிடம் கூறுகையில், இந்திய-வெஸ்ட் இண்டீஸ் தொடரை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். அதற்கு முன்பாக (டிச.2-ல்) எனக்கு மும்பையில் திருமணம். சூரத்தில் இருந்து நேரடியாக மும்பைக்குச் செல்கிறேன் எனத் தெரிவித்துச் சென்றார். மணிஷ் மணக்க இருக்கும் நடிகை அர்ஷிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச் 4, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.