மழையால் பாதித்தவர்க்கு நிவாரணம் வழங்குக டாக்டர் ராமதாஸ் அறிக்கை

சென்னை

சென்னை, டிச.2: பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் அளவுக்கு அதிகமான மழையால் சென்னை புறநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் கடலூர்- விருத்தாசலம் கொள்ளிடம், கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுக்தாறு, வெள்ளாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீராணம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். காவிரிப் பாசன மாவட்டங்களில் மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது வேதனையளிக்கிறது.

கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங் களிலும் மழையால் பொதுமக்களுக்கும், பயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் பொதுமக்களிடையே ஒருவகையான அச்சம் நிலவி வருகிறது. எனவே, மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிலைமையை சமாளிக்கத் தேவையான நிவாரண உதவிகளையும் அரசு விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.