ஏற்றுமதி நிறுவன ஊழியர் மரணத்தில் மர்மம் ஐடி அதிகாரிகள் சித்திரவதை செய்ததாக உறவினர்கள் புகார்

குற்றம் சென்னை

சென்னை, டிச.2: சென்னையில் வருமானவரி சோதனை நடைபெற்ற ஏற்றுமதி நிறுவன ஊழியர் தற்கொலை செய்ததில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். அடையாறில் முதல் கனால் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தின் பணியாற்றியவர் செந்தில்குமார் (வயது 38). பாலவாக்கத்தை சேர்ந்த இவர் இந்நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை ஏற்றுமதி நிறுவனத்தின் வருமானவரி சோதனை தொடங்கிய பின்னர் இவர் வடபழனியில் உள்ள மாமனார் வீட்டில் தங்கியிருந்து உள்ளார்.

பின்னர் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு ஆவணங்கள் விஷயத்தில் உதவுவதற்காக அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த அவர் வெள்ளிக்கிழமை காலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் சனிக்கிழமை மாலையில் மீண்டும் அலுவலகம் வருமாறு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவில் அவர் அலுவலக அறையில், பிணமாக கிடப்பதாக குடும்பத்தினருன்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பிறகு அங்கிருந்து உடற்கூறு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

செந்தில்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். இது குறித்து அடையாறு போலீசில் அவரது மனைவி சித்ரா புகார் கொடுத்தார். ஐடி அதிகாரிகளின் சித்திரவதை காரணமாக அவர் உயிரிழந்து இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர். போலீஸ் தரப்பில் கூறுகையில், சோதனை நடத்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க் ஒன்றை ஐடி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். செந்தில்குமார் வசம் இருந்த வீடியோவில் பெண்களின் ஆட்சேபனைக்கு உரிய புகைப்படங்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இது குறித்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் பீதியடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் பற்றி குறிப்பு எதையும், அவர் எழுதி வைக்கவில்லை.
தற்கொலை செய்த அன்று காலை 10 மணிக்கு மனைவியை தொடர்பு கொண்டு செந்தில்பேசிய போது தான் ஏமாற்றப்பட்டு விட்டதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், ஒரே குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும் கூறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.