சூரத், டிச.2:  சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வீழ்த்தி கர்நாடகா த்ரில் வெற்றி பெற்றது.

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சூரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, கர்நாடக அணி முதல் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை கர்நாடக அணி குவித்தது. அதிகபட்சமாக, கேப்டன் மணீஷ் பாண்டே 45 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட் ஆகாமல் கலக்கினார். இதனையடுத்து, பேட்டிங் செய்த தமிழக அணி முதலில் தடுமாறினாலும், மிடிர் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விஜய் சங்கர் மற்றும் பாபா அபராஜித் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கி உந்தி தள்ளினர்.

ஆனால், கடைசி ஓவரில் தமிழக அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார்.5-வது பந்தில் விஜய் சங்கர் ரன் அவுட் ஆன நிலையில், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அதை எதிர்கொண்ட முருகன் அஷ்வின் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில், கர்நாடக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கர்நாடகா கேப்டன் மணீஷ் பாண்டேவுக்கு இன்று திருமணம் நடைபெறும் நிலையில், இந்த வெற்றி அவருக்கு சிறந்த திருமண பரிசாக அமைந்தது.