8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளம்: அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாடு

சிதம்பரம், டிச.2: கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் பாதுகாப்பை கருதி ஏரியிலிருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி 47 அடியாக கொள்ளளவு உள்ளது. மேலும் வீராணம் ஏரிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியில் இருந்து 6 ஆயிரம் கனஅடி நீரும் சேத்தியாதோப்பு வி.என்.எஸ். மதகுலிருந்து 2500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சென்னை குடிநீருக்கு வீராணம் ஏரியிலிருந்து 74 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.மேலும் லால்பேட்டை பகுதியிலுள்ள வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து செல்லும் வெள்ளியங்கால் ஒடை பகுதியை சிதம்பரம் சப்- கலெக்டர் விசு ம ஹாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் ஞானசேகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வெள்ளியங்கால் ஓடை பகுதியில் அதிக அளவில் வெளியேறும் நீரால் கரையோர கிராமங்களான திருநாரையூர், சர்வ ராஜன் பேட்டை, வீர நத்தம் உள்பட பல கிராமங்களில் வெள்ளநீர் செல்லும் கூடிய சூழ்நிலை உள்ளது. இந்தப் பகுதியின் வருவாய்த் துறையினரும் பொதுப்பணித் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் கண்டமங்கலம் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.