கொச்சி, டிச.2:  இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடந்த கேரளா-கோவா அணிகள் இடையேயான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் 29-வது லீக் ஆட்டம் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறியது. கேரளா பிளாஸ்டர்ஸ்- எப்.சி. கோவா அணிகள் இடையிலான பரபரப்பான இந்த ஆட்டத்தில், 52-வது நிமிடத்தில் கோவா வீரர் மோர்டடா பாலுக்கு, சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆடும் நிலைக்கு கோவா அணி தள்ளப்பட்டது. கடைசி நிமிடத்திற்கு முந்தைய நிமிடங்கள் வரை கேரளா அணியே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கேரள அணிவசம் வெற்றி சென்றடையும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) எதிர்பாராத திருப்பமாக, கோவா அணியின் லெனி ரோட்ரிக்ஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதனால், கோவா அணி தோல்வியில் இருந்து தப்பியதுடன், ஆட்டமும் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்றைய நிலவரப்படி, கோவா அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வி, 3 டிரா உட்பட 9 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கேரள அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றி, 3 தோல்வி 2 டிரா உட்பட 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.  இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.