விழுப்புரம், டிச.2: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் அணை முழு கொள்ளளவை விரைவில் எட்டும் நிலையில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதானல் 11 கிராம மக்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: வீடூர் அணையின் மொத்த நீளம் 4500 மீட்டர், உயரம் 32 அடி மற்றும் கொள்ளளவு 605 மில்லியன் கன அடிகளாகும். தற்போது வீடூர் அணை 30.09 அடி நிரம்பியுள்ளதால் அதிகாலை 5 மணியளவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே வீடூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

எனவே வராகநதி கரையோர பகுதி களான அங்கிணிக்குப்பம், கணபதிப் பட்டு, விநாயகபுரம், ரெட்டிக்குப்பம், கயத்தூர், இளையாண்டிப்பட்டு, எம்.குச்சிப் பாளையம், இடையப்பட்டு, ஆண்டிப்பாளையம், பொம்பூர் மற்றும் திருவக்கரை ஆகிய கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்திருந்தார். அணையில் மொத்த கொள்ளவான 32 அடி யில் கடந்த வாரம் வரை 27அடியாக இருந்த நீர் மட்டம் தற்போது 31.6 அடியாக உயர்ந்துள்ளது. சங்கராபரணி மற்றும் தொண்டி ஆற்றில் நீர்வரத்து உள்ளதால் இதன் மொத்த கொள்ளவை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்து கொண்டிருக்கும் 1,200 கன அடி உபரி நீர் முழுவதும் நள்ளிரவு 12.10 மணிக்கு மூன்று மதகுகள் வழியாக சங்கராபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.